JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

புதன், அக்டோபர் 17, 2007

கொலு வைப்பதன் தத்துவம்!

கொலு வைப்பதன் தத்துவம்! பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. தன் எதிரிகளை வெற்றிக் கொள்வதற்காக மகாராஜா சுரதா தன் வியாபாரி சுமதியுடன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்கிறார். குரு கூறியபடி பரிசுத்தமான ஆற்று மணலைக் கொண்டு காளிரூபத்தை செய்கின்றான். அதை ஆவாகானம் பண்ணி உண்ணா நோன்பிருந்து மனதாலும் மெய்யாலும் வேண்டுகிறான். அம்பிகை அவன் வேண்டுதலை பூர்த்தி செய்து அரக்கர்களையும், பகைவர்களையும் அழித்துப் பின் ஒரு புதுயுகத்தினையே உண்டு பண்ணுகிறாள். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையினால் என்னைப் பூஜித்தால் நான் உனக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்கிறாள் அம்பிகை தேவி புராணத்தில். இதனால் தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனை பூஜிக்கிறோம். ஒன்பது படிகள் : நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும். * முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும். * இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும். * மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும். * நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும். * ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும். * ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும். * ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும். * எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம். * ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும். மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும். Please visit: http://movieraghas.blogspot.com http://pureaanmeekam.blogspot.com