எனது நண்பர் தமிழ் வலை உலக ஆன்மீக பதிவாளர் திரு ஜி. ரா. அவர்கள் அளிக்கும் விளக்க உரை இது காண்க: நன்றி: ஜி. ரா. அவர்களே:
”மணிவண்ணா!
கோகுலத்தில் உன் வீடு எப்படிப்பட்டது தெரியுமா? பல் கறப்பதற்காக ஒரு கலம்
வைத்து ஒரு பீய்ச்சு பீச்சினால் மறுகலனும் நிறைந்தொழுகும் அளவு பால்
சொரிகின்ற வள்ளல் பெரும் பசுக்கூட்டம் நிறைந்தவன் வீடு. அந்தப்
பசுக்கூட்டங்களைக் கொண்ட நந்தகோபனுடைய மகனே உறக்கம் தெளிவாய்!”
கோதை பாடும் பொழுது கண்ணனுக்குப் பொய்க்கோவம். கண்களைத் திறக்காமலே அவள் மனதோடு ஊடல் செய்தான்.
“ஓ!
அப்படியா! இதே அளவு பசுக்கூட்டங்கள் இன்னொரு வீட்டில் இருந்தால், அந்த
வீட்டிலும் ஒரு கண்ணன் இருப்பானோ? இவ்வளவுதான் கண்ணனின் பெருமையோ?”
ஒரு
நொடி பதறி சிறிது உயிரும் சிதறி அரண்டாள் ஆண்டாள். மறுநொடியே தெளிந்தாள்.
படுக்கையில் கிடக்கும் கண்ணனை மறந்தாள். நெஞ்சில் நிறைந்தவனை நினைந்தாள்.
உள்ளத்தில் பெருஞ்சுடர் வடிவாக நின்றான் கண்ணன். அந்தச் சுடரிடம்
வேண்டினாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி.
”அடியவரைக் காப்பதில் பெருமை உடையவனே! பெரியவனே! உலகில் காணும் காட்சியெல்லாமாக நின்று அகத்தில் சுடராக இருப்பவனே!
துயில் எழுவாய்! தவறானவர்கள் தங்கள் தவறுகளை உன் அருளால் திருத்திக்
கொண்டு உன்னையே வந்து பணிவது போல உன்னைப் போற்றி நாங்களும்
வந்திருக்கிறோம். உன்னைப் புகழ்ந்து நாங்கள் பாடுவதைக் காதால் கேட்டு
மனத்தால் அருளமாட்டாயா!”