JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, ஜனவரி 02, 2016

திருப்பாவை 17 வது பாசுரம்.



எனது வலைத் தள நண்பர் திரு ஜி ரா அவர்கள் தனது தளத்திலே தந்து இருக்கும் விளக்க உரை இதுவாம்.

நன்றி: திரு ஜி.ரா . அவர்களே. 

வாயிற்காவலர்கள் கதவைத் திறந்து வழிவிட்டதும் நந்தகோபரின் பெரிய வீட்டுக்குள் மற்ற ஆயர்சிறுமியரோடு நுழைந்தாள் கோதை.
வீடோ பெரிய வீடு. ஒவ்வொரு பக்கமும் அறைகள். திக்குத் திசை தெரியாமல் எந்த அறைக்கதவைத் தட்டுவது என்று குழப்பம். முற்றத்தில் இருந்தே ஒவ்வொருவரையாக எழுப்பலாம் என்று முடிவுக்கு வருகிறாள் ஆண்டாள்.
எடுத்தவுடன் அவர்கள் கண்ணனை எழுப்பவில்லை. நந்தகோபனையும் யசோதையையும் உறக்கத்திலிருந்து எழுப்புகிறார்கள்.
”உடை நீர் உணவு தந்து எங்களைக் காப்பாற்றுகின்ற எம்பெருமானே நந்தகோபனே எழுந்திராய். இளங்கொம்பு போன்ற ஆயர்குலத்துப் பெண்களில் எல்லாம் முதன்மையானவளே! குலவிளக்கே! எம்பெருமாட்டியே அசோதையே எழுந்திராய்”
நந்தகோபனோ அசோதையோ எழுந்து வருவதாகத் தெரியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் அடுத்து கண்ணனைத் துயிலெழுப்புகிறாள். மனக்கண்ணில் கார்மேனியன் தூங்கும் அழகை நினைத்துப் பார்க்கிறாள். ஒரு காலை மடக்கிப் படுத்திருந்த நிலை அவன் உலகு அளந்ததை நினைவு படுத்துகிறது.
“வானத்தை ஊடுருவிச் செல்லுமாறு காலை ஓங்கி உலகு அளந்த பெரியவனே! இன்னும் உறக்கமா? எழுந்திரு.”
அப்போதுதான் கண்ணனுக்கும் மூத்தவனான பலதேவனின் நினைப்பு வருகிறது. அவரும் உறங்கிக்கொண்டுதானே இருப்பார். அவரையும் துயிலெழுப்ப வேண்டுமே. வரிசை மாறிவிட்டதே என்று வருந்திக்கொண்டே பலதேவனைப் பள்ளியெழுப்பினாள் கோதை.
“மின்னும் செம்பொன்னால் செய்த வீரக்கழல்களைக் காலில் அணிந்துள்ள பலதேவா, நீயும் உன் தம்பியும் இன்னும் உறங்குவதா? நாங்கள் எழுப்புவதைக் கேட்டு மனமிரங்கி எழுந்திருங்கள்.”
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் - எங்களுக்கு உடை நீர் சோறு தந்து தருமம் செய்கின்ற
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் - எம்பெருமானாகிய நந்தகோபனே எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே - இளங்கொம்பைப் போன்று மென்மையான பெண்களில் எல்லாம் சிறந்தவளே, குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் - எம்பெருமாட்டியாகிய யசோதையே உணர்வு தெளிந்து உறக்கம் நீங்குவாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த - உலகுக்கு ஆடையாக விளங்கும் வானத்தை ஊடாக அறுத்து காலோங்கி உலகை அளந்தவனே
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் - மேலுலகத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் தலைவனே! உறக்கத்தை விட்டு எழுந்திருப்பாய்!
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா - செம்பொன்னாலான வீரக்கழல்களை அணிந்திருக்கின்ற செல்வனே! பலதேவா!
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய் - நீயும் உன் தம்பியும் இன்னும் உறங்கலாமா! எங்கள் அழைப்பைக் கேட்டு இதயத்திலிருந்து கருணை காட்டுங்கள்.