JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், ஜனவரி 05, 2016

முப்பத்து முக்கோடி (திருப்பாவை 20 )

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்ப முடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோ எம்பாவாய்தமிழ் வலைத் தள உலக ஆன்மீக எழுத்தாளர், எனது நண்பர் திரு ஜி ரா அவர்கள் தரும் விளக்க உரை இதோ :

அமரர்கள் முப்பத்து முக்கோடியர். அவர்களுக்கெல்லாம் தலைவனே! அமரர்க்கு அச்சம் அண்டினால் அதை அருகிருந்து அழிப்பவனே! அரங்கனே! அச்சுதனே! அமலனே! துயில் எழுவாய்! இப்படி அடியார் படும் துயரமெல்லாம் நிலத்தோடு நிலம் செய்யும் நீ நேர்மையும் திறமையும் உடையவன்! தீயோரின் ஆணவத்தை அழிக்கின்ற விமலனே துயில் எழுவாய்!”
இளவெயினி மனதில் ஒரு எண்ணம். “கோதை, முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த வீட்டின் முற்றத்துக்கு வந்துதானே கண்ணனிடம் உதவி கேட்டிருக்க முடியும். அத்தனை தேவருக்கு இந்த ஒரு முற்றம் போதாது அல்லவா.”
“அழகாகக் சொன்னாய் வெயினி. முற்றும் வினை நீக்கும் முற்றம் இதில் முற்றுமாய்த் தேவர் நிற்க இடமில்லாமல் போகலாம். ஆனால் காக்கும் மாலவன் நெஞ்சில் எல்லோருக்கும் இடம் உண்டு. இருந்த இடத்திலிருந்தே அவன் பெயர் சொன்னால் போதுமே. துயரெல்லாம் தீருமே.”
மாலவன் இல்லம் என்பது தத்தமது உள்ளம் என்று இளவெயினியோடு மற்றவர்களுக்கும் தெளிந்தது. அடுத்து நப்பின்னையை எழுப்பினாள் கோதை.
“உன்னைப் போல் அழகியும் உண்டோ! பொற்கலச மென்முலைகள். கோவைக்கனிச் செவ்வாய். குறுகும் சிற்றிடை. இப்படி கண்ணனே கிறங்கிக் கிடக்கும் எழிலே! நப்பின்னை நங்கையே! செல்வமே! துயில் எழுவாய்!
நீயும் எழுந்து உன் மணாளனையும் துயிலெழுப்புவாய். அவனுக்கு விசிறி வீசி கண்ணாடி காட்டி அழகூட்டி எங்களுக்கும் காட்டுவாய்! அவன் அருளில் எங்களையும் நீராடா வைப்பாய்!”

நன்றி : ஜி. ரா அவர்களே.