கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே?!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?!
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?!
தேசமுடையாய்! திறவேலோர் எம்பாவாய்!
எனது வலை நண்பர் திரு குமரன் அவர்கள் இதற்கான பொழிப்புரையை எவ்வளவு அழகாக தருகிறார் பாருங்கள்.
தலைப்பைக் கிளிக்கினால் அவர் வலைக்கு வழி கிடைக்கும்.
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் என்னும் பறவை பேசுகின்ற பேச்சுச் சத்தம் கேட்கவில்லையா பேய்ப்பெண்ணே? காசு மாலைகளும் தாலிச் சங்கிலியும் ஒன்றோடு ஒன்று உரசி ஓசை எழுப்ப, கைகளை மாற்றி மாற்றி வாங்கி, வாசமான நறுமணம் கொண்ட தலைமுடியுடைய ஆய்ச்சியர் மத்தினால் தயிர் கடையும் ஓசையைக் கேட்கவில்லையா? எங்களுக்குத் தலைவியான பெண்பிள்ளையே! நாராயணன் உருவமான கேசவன் கண்ணனை நாங்கள் பாடக் கேட்டும் நீ தூங்குகின்றாயா? நம்பமுடியவில்லை! ஒளி மிகுந்தவளே! எழுந்து வந்து கதவைத் திறவாய்!