JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், ஜனவரி 27, 2011

சரணம் அய்யப்பா (ஹரிவராசனம் மெட்டு )

பாடலை இயற்றிய திரு சிவகுமாரன் அவர்கள் வலைக்குச் செல்ல தலைப்பை கிளிக்கவும்.
  சரணம்  அய்யப்பா
    (ஹரிவராசனம் மெட்டு )
    சரணம் அய்யப்பா - சுவாமி சரணம் அய்யப்பா
    சரணம் அய்யப்பா - சுவாமி சரணம் அய்யப்பா
   
    அரனின் மோகனம் அரியின் யௌவனம்
     அளித்த சீதனம் அய்யன் உதித்தனன்
    பரம தேவனின் பாலன் அய்யப்பன்
      பதங்கள் தேடிஎன் பாடல் அர்ப்பணம் (சரணம்)
   
    வேங்கை வாகனம் விரும்பும் பாலகன்
     விரிந்த கானகம் உறையும் நாயகன்
    தாங்கும் பூமகன் தாளைத் தேடிஎன்
      தமிழில் கோர்த்திடும் மாலை சமர்ப்பணம்.(சரணம்..)
   
    மாலை அணிந்ததும் வேண்டும் கண்ணியம்
     மறந்தும் தவறுகள் தவிர்த்தல் புண்ணியம்
    காலை மாலையும் கடவுள் எண்ணமாய்
      காக்கும் விரதத்தால் கருணை திண்ணமாம்.(சரணம்..)
   
    பாதை முழுவதும் பாயும் முட்களாம்
      பாதம்  இடறியே பார்க்கும் கற்களாம்
    சோதனைகளைத் தாண்டி அய்யனின்
      சரணம் பாடுங்கள் வாழ்க்கை மலரலாம் ( சரணம்..)
   
    கட்டும் இருமுடி கனப்ப தில்லையே.
       கால்கள் வீங்கியும் வலிப்பதில்லையே.
    அட்ட திக்குகள் ஆளும் ஐயப்பன்
      அருளைப் பொழிவதால் அல்லல் இல்லையே. ( சரணம்...)
   
    பாரம் தலையிலே; பக்தி நெஞ்சிலே
      பாவக் கணக்குகள் பரமன் கையிலே
    வீர மணிகண்டன் பேரைச் சொன்னதும்
      விதியின் கடுமைகள் விலகிப் போகுமே. ( சரணம்..)
   
    பேட்டைத் துள்ளலில் வேடம் போடுங்கள்.
      பேதம் இன்றியே ஆடிப் பாடுங்கள்.
    காட்டுப் பாதையை கடந்து ஓடுங்கள்
       காட்சி  தருகிறான்-(அவனை) கனிந்து தேடுங்கள். (சரணம்..)
   
    பம்பை நதிப்புனல் பாவம் கரைத்திடும்
      படிகள் பதினெட்டும் பாடம் உரைத்திடும்
    நம்பி வந்திடில் நலங்கள் சேர்ந்திடும்
      நாளும் வணங்கினால் ஞானம் பிறந்திடும் ( சரணம்..)
   
    பாயும் புலியிடம் பாலைக் கறந்தவன்
      பாவி அரக்கியை அழிக்கப் பிறந்தவன்
    நோயும் பிணிகளும் நீக்கும் மருந்தவன்
      நுழைந்து பாருங்கள் (அவன்) இதயம் திறந்தவன் (சரணம்..)
   
    ஜோதி தரிசனம் கோடி புண்ணியம்
      சோகம் துயரங்கள் ஓடும் நிச்சயம்
    ஆதி பரமனும் அழகன் விஷ்ணுவும்
      அய்யன்  உருவிலே தோன்றல் சத்தியம். ( சரணம்..)
   
    சாமி அய்யப்பா என்னும் சரணங்கள்
      சபரி மலையிலே ஒலிக்கும் தருணங்கள்
    பூமி கைகளில் அடங்கும் பாருங்கள்
      புதிய சுகமது உணர வாருங்கள்      ( சரணம்..)
   
    ........சுவாமியே......ய்  சரணம் அய்யப்பா......