புது தில்லியில் வசிக்கும் திருமதி லலிதா மிட்டல் அவர்கள் ஆதி சங்கரரின் பஜ கோவிந்தத்தை தமிழில் மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார்கள். வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு இல்லை எனினும் கோவிந்தத்தின் சாரம் தெளிவாக இருக்கிறது. இந்த சுப்பு தாத்தா சும்மா இருக்க முடியாத தாத்தா . அதனால் அந்த பாடலை பல ராகங்களில் பாட முயற்சி செய்து இருக்கிறார். முதல் 11 பாடல்கள் மட்டும். மற்றவை பிறகு வரும்.
திருமதி லலிதா மிட்டல் அவர்கள் வேலைக்குச் செல்ல பதிவின் தலைப்பைச் சொடுக்கவும்.
1. பஜகோவிந்தம் பஜகோவிந்தம் .பஜகோவிந்தம் மூடமதே சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே நஹிநஹி ரக்ஷதி டுக்ரிங்கரணே]
துதி கோவிந்தனை,துதிகோவிந்தனை
கதி கோவிந்தனே, மடமதியே!
கதவினைக்காலன் தட்டிடும் நேரம்
உதவிடுமோ உந்தன் இலக்கண ஞானம் ?
2. [மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம் .குரு சத்புத்தி மனசி வித்ருஷ்ணாம்
யல்லபசே நிஜகர்மோபாத்தம் .வித்தம் தேன விநோதயசித்தம் ]
மூடா!பொன்பொருள் மோகம் அறுப்பாய் ;நாடுவாய் மெய்ப்பொருள் நிர்மல நெஞ்சால் ;
பாடுபட்டுழைத்து நீதேடிடும் தனத்தால்
கூடிடும் சுகத்துடன் குறையின்றி வாழ்வாய்.
3. [நாரிஸ்தனபர நாபிதேசம் த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம்
எதன்மான்சவசாதிவிகாரம் மனசி விசிந்தய வாரம் வாரம் ]
வெறியூட்டும் இள வனிதையர் தோற்றம்,வெறுந் தோல்மூடிய சதைகளின் மாற்றம்,
வெறுப்பூட்டும் இந்த உண்மையை உணர்வாய்.
மறவாதிருக்கப் பலமுறைநினைப்பாய்.
4. [நளினிதளகதஜலமதிதரலம் தத்வஜ்ஜீவிதமதிசயசபலம்
வித்திவ்யாத்யபிமானகிரஸ்தம் லோகம் சோகஹதம் ச சமஸ்தம் ]
தாமரை இலையினில் நீர்த்துளிபோலேபூமியில் வாழ்வும் நிலையற்றதாமே.
ரோகமும் பீதியும் சேர்ந்ததோர் சோக
சாகரமிந்த உலகென உணர்வாய்.
5.[யாவத்வித்தோபார்ஜனசக்த--ஸ்தாவன்நிஜபரிவாரோ ரக்த :
பச்சாஜ்ஜீவதி ஜர்ஜரதேஹே வார்த்தா கோபி ந ப்ருச்சதி கேஹே ]
சம்பாதித்திடும் தெம்புள்ளவரையில்
அன்பாய்ப் பழகிடும் உனபரிவாரம்
ஓடாய் உழைத்துநீ ஓய்ந்திடும் நேரம்
வேண்டாதவனாய் ஒதுக்கிடும் உன்னை.
6.[யாவத்பவனோ நிவசதி தேஹேதாவத்ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாபாயே பார்யா பிப்யதி தஸ்மின்காயே]
சுவாசமிருக்கும் வரையினிலுன்மேல்பாசம் காட்டும் உன்பரிவாரம்.;
உயிரற்ற உன்னுடல் கண்டுன்மனைவியும்
பயந்து ஒதுங்கிப் பதுங்குவதுண்மை!
7.[பாலஸ் தாவத் க்ரீடாசக்த --ஸ்தருணஸ்தாவத்த ரூணிசக்தஹ
வ்ருத்தஸ்தாவச் சிந்தாசக்தஹ பரேப்ரும்ஹாணி கோபினசக்தஹா]
விளையாட்டில் சிறுவயதை கடந்தாய் ;
இளமையைச் சிற்றின்பத்திலிழந்தாய்;
முதுமையில் குடும்பக் கவலையில் கவிழ்ந்தாய்;
முழுமுதற்கடவுளை முற்றிலும் மறந்தாய்.
8.[கா தேகாந்தா கஸ்தே புத்திரஹ சன்சாரோயமதீவ விசித்ரஹ
கஸ்யம் த்வம் கஹ குத ஆயாத -ஸ்தத்வம் சிந்தய ததிஹ ப்ராதஹ ]
யாருந்தன் மனைவி? யாருந்தன் பிள்ளை/ ?
பாரினில் பந்தங்கள் விசித்திரத்தொல்லை !
'"யாருடையோன் நீ ? யார் நீ ?'"என்றே
ஆராய்ந்துணர்வாய் மெய்மையை நன்றாய் .
9.[சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சல சித்தம் நிஷ்ச்சலசித்தே ஜீவன்முக்திஹி ]
தேய்ந்திடுமாசை தூயரைச் சேர்ந்தால் ;
மாய்ந்திடும் மாயை ,ஆசையுந்தேய்ந்தால் ;
எட்டிடும் மெய்ப்பொருள் ,மாயை மாய்ந்தால்;
கிட்டிடும் ஜீவன் முக்தியுமதனால்.
10.[வயசிகதே கஹ காமவிகாரஹ சுஷ்கே நீரே கஹ காசாரஹ
க்ஷீணோ வித்தே கஹ பரிவாரோ ஞாதே தத்வே கஹ சன்சாரஹ]
முதுமையில் மோஹத்திற்கிடமேது?
வறண்ட நீர்நிலை ஏரியாகாது.
சொத்திழந்தோனுக்கு சொந்தங்களேது?
சத்தியமுணர்ந்தபின் பந்தங்களேது?
11.[மா குறு தனஜன யௌவன கர்வம் ஹரதி நிமேஷத்காலஹ சர்வம்
மாயாமயமிதமகிலம் ஹித்வா ப்ரம்ஹபதம் த்வம் பிரவிஷா விதித்வா ]
பணம்,படை,இளமையால் ஆணவம் வேண்டாம் ;
கணத்தினிலழிபவை இவையென அறிவாய் ;
மாயாமயமிந்த வாழ்வென உணர்ந்தே
தூயப்ரம்ம நிலைதனை யடைவாய் .
இதற்குப் பின்னே வரும் பாடல்கள் அடுத்த பதிவில் பாடப்பெறும்.
12. [தினமபி ரஜனி சாயம் ப்ராதஹ சிஷிர வஸந்தௌ புனராயாதஹ
காலஹ க்ரீடதி கச்சத்யாயுஹு ததபின முஞ்சத்யாஷாவாயுஹு ]
புலரும்பொழுதுமாலையாய் மாறும் ;
குளிரும்பனியும் வசந்தமாய் மாறும் ;
இளமை மாறி முதுமை வரினும்
உளத்தாசை மட்டும் மாறுவதில்லை !
13.[கா தே காந்தா தனகதசிந்தா வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா
க்ஷணமபி சஜ்ஜனசங்கதிறேகா பவதிபவார்ணவதரணே நௌகா ]
பத்தினி,சொத்தென சிந்தனை நன்றோ?
அத்தனையும் அவனருளாலன்றோ ?
உத்தமர் உறவே பிறவிக்கடலினை
பத்திரமாகக் கடந்திட உதவும் !
14.[ஜடிலோமுண்டி லுஞ்சிதகேஷஹ காஷாயாம்பரபஹுக்ருதவேஷஹ
யஷ்யன்னபி ச ந யஷ்யதி மூடோ ஹசுதரநிமித்தம் பஹுக்ருதவேஷஹ ]
சடைமுடி வளர்த்து தபஸ்விபோல் தெரிவார் ;
முடித்தலை மழித்து மகான்போல் காண்பார்;
உடுத்திய காவியில் துறவிபோல் திரிவார் ;
நடிப்பெல்லாம் தம் வயிற்றை நிறப்ப!
15.[அங்கம் கலிதம் பலிதம் முண்டம் தஷனவிஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் ததபி ந முஞ்சத்யாஷாபிண்டம் ]
தள்ளாமையால் உடல் தளர்ந்துவிட்டாலும் சுகத
வெள்ளியாய்த்தலைமுடி வெளுத்துவிட்டாலும்
பல்லிழந்தே வாய் பொக்கையானாலும்
பொல்லாத ஆசைகள் போவதேயில்லை !
16.[அக்ரே வன்ஹிஹி ப்ருஷ்டே பானுஹு ராத்ரௌ சுபுக சமர்ப்பிதஜானுஹு
கரதலபிக்ஷஸ்தருதலவாசஹ ததபி ந முஞ்சத்யாஷாபாஷஹ ]
துறவியாய் வெயிலில் குளிர்க்காயந்திருப்பார்;
உறங்கிட முடங்குவார் காட்டாந்தரையில் ;
கரமேந்தி உணவு ;மரத்தடி வாழ்க்கை;
இருப்பினும் துறத்துது பலவித வேட்கை ;
17.[[குருதே கங்காசாகரகமனம் வ்ருதபரிபாலனமத்வா தானம்
ஞானவிஹீனஹ சர்வமதேன முக்திம் ந பஜதி ஜன்மஷதேன]
நிர்மலகங்கையில் நீராடிடினும்
நியமமாய் விரதங்கள் அனுசரித்திடினும்
உன்னை நீ உணராவிடில் கிட்டாது
ஜன்மங்கள் நூறெடுத்தாலும் முக்தி !
18.[சுரமந்திரதரு மூலநிவாசஹ ஷய்யாமூதலமஜினம் வாசஹ
ஸர்வப்பரிக்ரஹமோகத்யாகஹ கஸ்ய சுகம் ந கரோதிவிராகஹ]
தங்கிட ஆலயமும் தரு நிழலும் ;
அங்கத்தை மூடுவதோ தோலாடை ;
இங்ஙனம் யாவும் துறந்தவர் மனத்தில்
பொங்கிடும் மகிழ்ச்சி மங்குவதேது ?
19.[ யோகரதோவா போகரதோ வா சங்கரதோ வா சங்கவிஹீனஹ
யஸ்யப்ரம்மணி ரமதே சித்தம் நந்ததி நந்ததி நந்தத்யேவ]
யோகமோ,போகமா எதில் சுகித்தாலும்
சினேகமோ,தனிமையோ எதில் மகிழ்ந்தாலும்
மனம் பரம்பொருளுடன் லயித்துவிட்டாலோ
ஆனந்தம்!என்றும் பரமானந்தம் !
20. [பகவத்கீதா கிஞ்சித தீதா கங்காஜலலவகணிகா பீதா
சக்ருதபி ஏன முராரி சமர்ச்சா த்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா ]
சிலவரியேனும் கீதை படிப்போர்க்கும் ,
துளியேனும் கங்கை நீர் குடிப்போர்க்கும் ',
அரியைக் கணமேனும் துதிப்போர்க்கும் ,
ஒருகாலும் யமபயமென்பதே இல்லை.
21. [புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனிஜடரே சயனம்
இஹ சன்சாரே பஹுதுஸ்தாரே க்ருபயா பாரே பாஹி முராரே ]
மாண்டபின் ஜனனம்;மறுபடி மரணம் ;
மீண்டும் தாயின் கர்ப்பத்தில் சயனம் ;
பிறவிக்கடலிதைக் கடப்பது கடினம்;
கரை சேர்த்தருள்வாய் ,முராரி!சரணம் .
22.[ரத்யாசற்படவிரசிதகந்தஹ புண்யாபுண்யதிவர்ஜிதபந்தஹ
யோகி யோகநியோஜிதசித்தோ ரமதே பாலோன்மத்தவதேவ ]
வழியிலகப்பட்ட கந்தலுடுத்தி
பழி,புகழ் கடந்ததோர் நெறி கடைபிடிக்கும்
யோகியர் ஈசனுள் ஐக்கியமாகி
குழந்தைகள் போலே குதூகலித்திருப்பார்.
23.[கஸ்த்வம் கோஹம் குத ஆயாதஹ காமே ஜனனி கோ மே தாதஹ
இதி பரிபாவய சர்வமசாரம் விஸ்வம் த்யக்த்வா ச்வப்னவிசாரம் ]
" நான் யார்?நீ யார்? யார் தாய், தந்தை?
நாநெங்கிருந்து வந்தேன் ?'"என்றே
தேறியுணர்வாய், கனவுமயமான
பாருலகத்து பந்தமறுத்தே
24. [த்வயி மயி சான்யத்ரைகோ விஷ்ணு -வ்யர்த்தம் க்ருப்யசி மய்யசஹிஷ்ணுஹு
சர்வஸ்மின்னபி பஷ்யாத்மானம் சர்வத்ரோத்ஸ்ருஜ பேதஞானம்]
அனைத்திலும் நிறைந்த அரியை உன்னுள்
உணர்ந்திடத் தேவை உள்ளத்தில் பொறுமை ;
அஞ்ஞானத்தால் வரும் பேதமொழித்தே
என்றும் எதிலும் அவனையே காண்பாய் .
25.[ஸ்ஹத்ரௌ மித்ரேபுத்ரே பந்தௌ மா குரு யத்னம் விக்ரஹஸந்தௌ
பவ சமசித்தஹ சர்வத்ரம் த்வம் வாஞ்சஸ்யசிராத்யதி விஷ்ணுத்வம் ]
உற்றார்,அற்றாருடன் உறவை வளர்ப்பதில்
பொற்சமயம் வீணாக்குதல் வேண்டாம் .
உள்ளம் சமநிலையடைந்து நிலைத்தால்
உனக்கும் கிட்டும் விஷ்ணுத்துவமே!
26.[காமம் குரோதம் லோபம் மோஹம் த்யக்த்வாத்மானம் பாவய கோஹம்
ஆத்மஞானவிஹீனா மூடாஹ தே பச்யந்தே நரகநிகூடஹ ]
காமக்ரோத லோபமோகம் ஒழித்து
'' நானே அவன் ''என்ற ஞானம் பெறுவாய் .
மெய்ப்பொருள் தேடா மூடர்கள் இந்த
வையத்திலேயே உணர்வார் நரகம் !
27.[கேயம் கீதா நாம சஹஸ்ரம் த்யேயம் ஸ்ரீபதிரூபமஜஸ்ரம்
நேயம் சஜ்ஜன சங்கே சித்தம் தேயம் தீனஜனாய ச வித்தம் ]
கீதையும் ,அரியின் ஆயிரம்பேரும்
ஓதியே த்யாநிப்பாய் திருமகள் பதியை;
தூயோர் நட்பை நாடுவாய் என்றும் ;
தீனருக்கு தனம் ஈந்து மகிழ்வாய்.
28.[சுகதஹ க்ரியதே ராமாபோகஹ பஷ்சாதந்த ஷரீரே ரோகஹ
யத்யபி லோகே மரணம் சரணம் ததபி ந முஞ்சதி பாபாசரணம்]
இன்பத்தில் மூழ்கி இளமை இழப்பார் ;
பின்விளைவே பல ரோகமென்றரியார்;
மரணம் உறுதி என்றறிந்தி ருந்தாலும்
துறவாரே தன் தீயநெறிகளை !
29. [ அர்த்தமனர்த்தம் பாவய நித்யம் நாஸ்தி தத ஹ சுகலேஷஹ சத்யம்
புத்ராதிபி தனபாஜாம் பீதிஹி சர்வத்ரைஷா விஹிதா ரீதிஹி ]
தனத்தால் சுகமில்லை சோகமே என்று
அனுதினம் நினைப்பாய் மீண்டும் மீண்டும்
தனயனும் சொத்தால் உன்பகையாவான் .
மனித இயல்பிதை மறந்திடவேண்டாம் .
30.[பிராணாயாமம் ப்ரத்யாஹாரம் நித்யநித்யவிவேகவிசாரம்
ஜாப்யசமேத சமாதிவிதானம் குர்வவகானம் மகதவகானம் ]
புலனடக்கி சுவாசம் சீராக்கி
அலசிஆய்வாய் எது நித்தியமென்றே
மௌனத்தில் மூழ்கி ஜபத்தினில் ஆழ்ந்து
கவனமாய் செயல்படு இலக்கினையடைய .
31. [குருச்சரணாம்புஜ நிற்பர பக்தஹ சந்சாராதசிராத்பவமுக்தஹ
செநிந்த்ரியமானச நியமாதேவம் த்ரக்ஷ்யசி நிஜஹ்ருதயச்தம் தேவம் ]
பரமாய்குருவினை நம்பிடும் பக்தா!
அறநெறிகாத்து ஐம்புலனடக்கி
பிறவிக்கடலை எளிதாய்க் கடப்பாய்!
இறைவனையுன்னுள் அனுபவித்திருப்பாய் !
==========================================================================
.
Posted by Lalitha Mittal